சென்னை:
“பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12 தேதிகளில் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.  ஆகவே அவரது  வீட்டிலும் வருமானவரி ரெய்டு நடத்த வேண்டும்” என்று ‘மே 17 இயக்கம்’ வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ‘மே-17 இயக்கம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
,’பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12 தேதிகளில் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் மூன்று நாட்களுக்குள் இவ்வளவு பணம் எப்படி செலுத்தப்பட்டது. பழைய பணத்தை மாற்றுவதற்கு கூட்டுறவு வங்கிகளில் தடைவிதித்திருக்கும் போது,  பா.ஜ..,வின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளில் பழைய பணம் மாற்றப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா செய்திருக்கும் இந்த 500 கோடி ரூபாய் கருப்புப் பணம் குறித்து ‘துணை ராணுவத்தோடு’ ரெய்டு நடத்துவார்களா? ‘ நேர்மை, யோக்கியம், ஊழல் ஒழிப்பு’ நாடகங்கள் எல்லாம் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமா?
கடந்த டிசம்பர் 19ம் தேதி அகமதாபாத் ஆஷ்ரம் சாலையில் உள்ள, தலைமை கிளையில் அமலாக்கத் துறையினரால் 7 மணி நேரம் நடத்தபப்ட்ட ரெய்டு ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் நடந்த செய்தி மட்டும் பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது”  இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளது.