சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் மெட்ரிகுலேசன் பள்ளிகள், ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி பெற வேண்டும் என்று தமிழகஅரசுஉத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்கம் சார்பில் சேன்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவில், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில், தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை, ஆனால் தமிழகஅரசு தற்காலிக அனுமதி மட்டுமே வழங்கி வருகிறது. இது சட்டத்தை மீறிய செயல். எனவே தற்காலிக அங்கீகாரம் என்ற கட்டுப்பாட்டை நீக்கி நிரந்தர அங்கீரம் வழங்க உத்தரவிட வேண்டும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுமீதா விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையன்போது, 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில், 1994ஆம் ஆண்டு அரசாணைக்கு பின் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், 1994ஆம் ஆண்டு அரசாணை செயலற்று விட்டதாகவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து அரசாணைகளை ஆய்வு செய்த நீதிபதி, பின்னாளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் 1994ஆம் ஆண்டு அரசாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறியதுடன், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.