சென்னை: தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை இதுவரை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 14ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரு தீப்பெட்டியின் விலை ரூ. 2 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டி விலை உயரும் என, ஏற்கனவே சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்கள் தெரிவித்திருந்தது. ‘தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, தீப்பெட்டி தயாரிக்க 14 வகையான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. இவற்றின் விலை உயர்வு மற்றும் உற்பத்தியின் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அகில இந்திய தீப்பெட்டிகள் சம்மேளனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் தீப்பெட்டி (Matchbox) விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு தீப்பெட்டியின் விலை50 பைசாவில் இருந்து ரூ .1 ஆக உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போதுதான் (2021) தற்போது தீப்பெட்டியின் விலையை ரூ. 2 ஆக உயர்த்துவதற்கான முடிவை அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்ந்து எடுத்துள்ளன.
அதன்படி இந்த விலை உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.