அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 959 மாணாக்கர்கள், ஒரே கேள்விக்கு ஒரேமாதிரி பதிலெழுதியுள்ளதோடு, அந்த பதில்களில் ஒரேமாதிரி தவறுகளை செய்துள்ள நிகழ்வு அம்மாநிலத்தின் கல்வி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய காப்பியடிக்கும் நிகழ்வாக இது கருதப்படுகிறது. தேர்வு தொடர்பாக கடுமையான கண்காணிப்புகள் அமல்படுத்தப்பட்ட நிலையிலும் இந்த தவறு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 959 மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் 2020ம் ஆண்டுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் மோசடி செய்த பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மோசடி நடைபெற்றதாக கூறப்படும் தேர்வு மையங்கள், குஜராத்தின் ஜுனாகத் மற்றும் கிர்-சோம்நாத் மாவட்டங்களில்தான் அதிகம். கணக்கியல், பொருளாதாரம், ஆங்கில இலக்கியம் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடங்களில் இந்த காப்பியடிக்கும் மோசடி நிகழ்ந்துள்ளது.