திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருவமழையின்போது கேரள  மாநிலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்த நிலை யில், தற்போதைய ரெட்அலர்ட்  அறிவிப்பு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்  என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணனூர், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில்  3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் இயற்கை பேரிடர்களான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியன நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கனமழையை கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜூலை 17- ம் தேதி இடுக்கி, 18-ம் தேதி கோட்டயம், 19-ம் தேதி எர்ணாகுளம், பாலக்காடு, 20-ம் தேதி பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணனூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தொழிலாளர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே அனைவரும் வானிலை அறிவிப்புகளின் எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறு பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து கேரளாவில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் குழுவினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் கேரள அரசு தெரிவித்து உள்ளது.