சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னை பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்றும்,கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,672 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14,504 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 82 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1072 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 373 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சென்னையில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என நிறுவனங் களுக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மக்கள் பொதுஇடங்களில் முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும்,வணிக நிறுவனங்கள் தங்களது அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.