ண்டாள் பிராட்டி அருளிச் செய்த திருப்பாவை எனும் திவ்யப்ரபந்தமானது மிகவும் மங்களத்தைத் தரக்கூடியது.

இந்த திருப்பாவையை பெரியோர்களிடத்தில் நன்றாகத் தெரிந்து கொண்டு மனப்பாடம் செய்து கொண்ட வர்களுக்கும், அதற்கு மேல் அதன் அர்த்தங்களை முறைப்படி நன்றாகத் தெரிந்து கொண்டவர்களுக்கும், ப்ரதி தினமும் பகவத் ஸந்நிதியில் பாராயணம் செய்கிறவர்களுக்கும்,

அத்திருப்பாவையில் சொல்லப்பட்டிருக்கிற ஸ்ரீமந்நாராயணனிடத்திலும் அவனுடைய விபவாவதாரங்களான ராமக்ருஷ்ண வாமநன் முதலான பெருமாள்களிடத்தில் பரிபூர்ணமான பக்தியுள்ளவர்களிடத்திலும், அதில் (திருப்பாவையில்) சொல்லியிருக்கிறபடி பகவத் பக்தர்களிடத்தில் அன்பு கொள்பவர்களுக்கும்,

அதில் சொல்லியிருக்கிறபடி நாம் பகவத் தாஸன் என்று தெரிந்து கொண்டவர்களுக்கும், நாம் பகவானுடைய தாஸன் என்கிற எண்ணத்தை எவ்வித ஆபத்துகள் நேர்ந்தாலும் அதனால் எவ்வளவு தன நஷ்டம்ஆனாலும், யாருடைய விரோதம் வந்தாலும் ஒரு பொழுதிலும் மாற்றிக்கொள்ளாதவர்களுக்கும, ஸகல காரியங்களையும் ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்த்தம் என்று செய்கிறவர்களுக்கும், பகவானிடத்திலும் கூட மோக்ஷம் தவிர வேறு எந்த பலத்தையும் ஆசைப்படாதவர்களுக்கும் மங்களம் தரக்கூடியது.

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில், வேதாந்தங்களில் எல்லாவற்றிற்கும் காரண பூதனாகச் சொல்லப்பட்ட ஸ்ரீமந்நாராயணனையே முதல் பாசுரம் முதல் கடைசிபாசுரம் வரையில் ஸர்வாபீஷ்டபலங்களையும் கொடுக்கிறவன் என்று சொல்லியிருக்கிறபடியால், அந்த நாராயணனே ஸகல பலத்தையும் தருவானாகையால் அந்த திருப்பாவையே ஸர்வ மங்களங்களையும் தரக்கூடியது என்று முதலில் பிரதிஜ்ஞை செய்யப்பட்டது.

இம்மாதிரி ஸர்வோத்க்ருஷ்டனான ஸ்ரீமந்நாராயணனையும் அவனுடைய அவதாரமான நாராயண மூர்த்திகளையும் ஸந்தேகமில்லாமல் நமக்குக்காட்டித் தருகிறது திருப்பாவை.

‘பாவை’ என்றால் ஒரு உருவம். அதாவது, கை கால்கள் தலை முதலியவற்றுடன் கூடிய ஒரு உடல் (பிம்பம்). இதை பெரியோர்கள் விக்ரஹம் என்பார்கள். திரு என்றால் லக்ஷ்மி, திரு என்றால் நாராயணன். லக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் ‘திருப்பாவை’ யானது விக்ரஹம் என்று அர்த்தமாகிறது.

பாசுரங்களால் செய்யப்பட்ட #திவ்யமங்கள விக்ரஹம் என்று ஏற்பட்டது. ஆகையால் ராமகிருஷ்ணாதி அவதாரம் போலவே திருப்பாவை என்ற ஒரு அவதாரம் ஆண்டாளிடத்தில் செய்தான் ஸ்ரீமந் நாராயணன். ராமன் என்கிற திருமேனியில் பகவான் மாத்திரம் இருக்கிறான்.

சீதை என்கிற திருமேனியில் லக்ஷ்மி மாத்திரம் இருக்கிறாள். #திருப்பாவை என்கிற சப்த ரூபமான திருமேனிக்குள் லக்ஷ்மியும் நாராயணனும் சேர்ந்திருக்கிறார்கள். ஆக ஒரு திருமேனியிலேயே திவ்யதம்பதிகள் இருக்கிறார்கள். இதுதான் இந்த அவதாரத்தின் விசேஷம்…

திருப்பாவையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஸாரம்….(தினம் ஒன்றாக)

முதல் நாள் பாசுரம் –

இதில் ஸ்ரீமந் நாராயணனே கண்ணன் என்று நமக்கெல்லாம் மனதில் படியும்படி அருளிச் செய்திருக்கிறாள்.

“மார்கழித் திங்கள்” என்கிற முதல் பாட்டினால், நாம் எந்த காரியம் செய்தாலும் இது நல்ல காரியம், எல்லோருக்கும் உபயோகப்படக் கூடியது , பகவானும் ஸந்தோஷிப்பான், லோகத்தாரும் கொண்டாடும்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

திருப்பாவை பாசுரம் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்:

இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்