சென்னை மெரினா கடற்கரையில் தற்போது சுமார் ஐநூறு இளைஞர்கள் கலைய மறுத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களிடம் இன்று சுமார் ஐந்து மணி அளவில், போலீசார் ஒலிபெருக்கியில், “மாணவர்களே.. இளைஞர்களே! கடந்த ஆறு நாட்களாக மிக அமைதியான முறையில், கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடத்தினீர்கள். காவல்துறையும் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது. தற்போது ஜல்லிக்கட்டு தடையை நீக்க அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இனி ஜல்லிக்கட்டுக்கு எந்தவித தடையும் எப்போதும் வராது. இதை அரசும், வழக்கறிஞர்கள் பலரும், ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களும் கூறியிருக்கிறார்கள்.

ஆகவே கலைந்து செல்லுங்கள். இனியும் போராட தேவையில்லை. உங்கள் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. கொண்டாட வேண்டிய நேரம் இது.  ஆகவே மகிழ்ச்சியுடன் கலைந்து செல்லுங்கள்” என்று மெரினாவில் காவல்துறை அறிவித்துக்கொண்டே இருக்கிறது.

காவல்துறையினர் தடி எடுத்துவரவில்லை.

வரும் 26ம் தேதி குடியரசு தின விழா நடக்க இருக்கிறது. அதற்குள் மெரினா பகுதியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு இருக்கிறது.

ஆகவே  உடனடியாக போராட்டக்கார்ரகள் அனைவரையும் வெளியேற்ற வேண்டிய நிலையில் காவல்துறை இருக்கிறது.

பெரும்பாலான போராட்டக்காரர்கள் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது ஐநூறு போராட்டக்கார்ரகள் மெரினாவில் இருக்கிறார்கள். சுமார் 2000 காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது காவல்துறை அணிவகுப்பும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போராட்டம் நீடித்தால், காவல்துறை பலப்பிரயோகத்தை பிறப்பிக்கும் சூழல் நிலவுகிறது.