சென்னை:  கொரோனா தொற்று பரவல் காரணாக, பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில்  உயர்நீதிமன்றத்தில்  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் 90 சதவிகிதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்போது சினிமா தியேட்டர், கடற்கரை, நீச்சல் குளம் போன்றவைகள் மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த தடை தொடர்கின்றன. அதுபோல கல்வி நிறுவனங்களும் திறக்க தடை தொடர்கிறது.

இந்த நிலையில், மெரினா கடற்கரை கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது,  சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது, விழாக்காலம் தொடங்குவதால் நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறேன். சென்னை மெரினா கடற்கரையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள்  முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க கண்காணிக்கிறோம் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்து வரும்  நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ்  அடங்கிய அமர்வின் கடந்த 5-ம் தேதி மீண்டும் விசாரணையின்போது, ஆ4ரான தமிழகஅரசு வழக்கறிஞர் , தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 31  வரை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறக்க முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.