திமுக கொடுத்த தேர்தல் நிதியில் முறைக்கேடாக தங்களின் பெயரில் இடதுசாரி தலைவர்கள் சொத்துக்களை வாங்கியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாரிதாஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், “நாடாளுமன்றத் தேர்தலில் இரு இடதுசாரிகளும் மொத்தமாக 4 தொகுதிகளில் போட்யிட்டனர். தேர்தல் நிதியாக அவர்களுக்கு ரூ. 25 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பொதுவாகவே தேர்தல் செலவினம் என்றால் கணக்கில் வைத்திருப்பது ஒன்று, கணக்கில் காட்டாதது மற்றொன்று. அரசியல் கட்சிகளிலேயே அதிகம் நியாயம் பேசும் இடதுசாரிகள். இந்த பணத்தை யார் பங்கு போட்டுக் கொண்டார்கள் என கேட்கவேண்டியது அவசியம்.

தேர்தல் காலத்தில் இடதுசார்பு பத்திரிகையான மாத்ரூபூமிக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்குவது வழக்கம். தேர்தல் காலத்தில் பலரிடம் நன்கொடை வசூலிப்பதை வழக்கமாக அக்கட்சி வைத்திருக்கிறது. அதேநேரம், நன்கொடை அளித்தவர்களை எதிர்த்தே போராட்டம் நடத்துவதும் அக்கட்சிகளின் வாடிக்கை. இடதுசாரி கட்சிகளில் உள்ளவர்கள் யாரும் நியாயவாதிகள் கிடையாது. வாங்கிய பணத்தை யார் பிரித்துக் கொண்டார்கள் என தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் திமுக கொடுத்த செலவு கணக்கு அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 10 கோடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பணமே வாங்கவில்லை என மறுத்த இடதுசாரி தலைவர்கள், பின்னர் வேறு வழியின்றி இப்போது ஒப்புக்கொண்டுள்ளனர். சில தலைவர்கள், திமுகவிடம் இருந்து வாங்கிய பணத்தில், தங்கள் குடும்பத்தார் பெயரில் முறைக்கேடான முறையில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாரிதாஸ் மீது திமுக உட்பட எதிர்கட்சிகள், பாஜக ஆதரவு நிலைபாட்டுடையவர் என்கிற பெயரில் பல்வேறு புகார்களை காவல்துறையில் அளித்துள்ள நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுக்கு திமுக கொடுத்த நன்கொடை தொடர்பாக மாரிதாஸ் வெளியிட்டுள்ள இக்காணொளி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.