சென்னை: சென்னையில் 22ந்தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் 3மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள தொகுதி மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பதாக திமுக மருத்துவர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான நா.எழிலன் தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள  7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.

இந்தநிலையில்,  தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தபோது,   தொகுதி மறுசீரமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சில மாநில முதல்வர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

 கேரளா முதல்வர் பினராயி விஜயன், கோவிந்த், பினாய் விஷ்வம், கும்பகடி சுதாகரன் மற்றும் கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், மணி, எம்.கே.பிரேம சந்திரன் கலந்து கொள்கின்றனர்.

ஆந்திராவிலிருந்து மிதுன் ரெட்டி, தெலங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கே.டி.ராமராவ், வினோத் குமார் எம்.பி., பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், கர்நாடகாவிலிருந்து துணை முதல்வர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

மத்தியஅரசு தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தால்,  உத்தரப்பிரதேசத்தின் இடங்கள் 80-ல் இருந்து 143 ஆகவும், பிஹாரில் 40-ல் இருந்து 79-ஆகவும், மத்திய பிரதேசத்தில் 29-ல் இருந்து 52-ஆகவும் அதிகரிக்கக் கூடும். ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதே அளவில் அல்லது   குறைவாகத்தான் இருக்கும்.

நமது  உரிமைக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க நமது பிரதிநிதித்துவம் இருந்தால் தான் முடியும். இவற்றை உணர்ந்துதான் முதல்வர் களம் அமைக் கிறார்; நியாயம் கேட்கிறார்.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

முன்னதாக, தொகுதி மறுவரையறை குறித்து, 7 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,  தொகுதி மறுவரையறையின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டுடன், ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து, இந்தியா முழுவதும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மாநிலங்களையும் அணுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும்,   இந்தப் பிரச்சினை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று தாம் நம்புவதாகவும், கூட்டாட்சி கொள்கை என்ற நம்முடைய அடிப்படையான தத்துவத்தைப் பாதிப்படையச் செய்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், இப்பிரச்சினையின் அரசமைப்புரீதியான, சட்ட மற்றும் அரசியல்ரீதியான பரிமாணங்களை நாம் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அத்துடன்,  தொகுதி மறுவரையறை  குறித்து முடிவு செய்ய,   ஒரு கூட்டு ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த விவாதங்கள் மூலம் மட்டுமே, சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.