சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 20ந்தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், மார்ச் 2ந்தேதி நிதிநிலை  தொடர்பாக இறுதிக்கட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்ச் 4ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக அரசின் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன் வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நிதி நிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைக்காக மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றம் கூடுகின்றது. நிதி நிலை அறிக்கைகள் தொடர்பாக தொழில் துறையினருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொள்கிறார்.  மேலும், பல்வேறு கருத்துக் கேட்புக் கூட்டங்கள், பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளும் பெறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை  தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் மார்ச் 2 ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறு குறு, நடுத்தர தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

அதுபோல, வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் மார்ச் 4 ஆம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறுகின்றது.

முன்னதாக நேற்று (27ந்தேதி) மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,  “தமிழக சட்டமன்றப் பேரவை விதி 26 (1)ன்படி, 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை வரும் மார்ச் மாதம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

தொடர்ந்து 2023-24ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையினை மற்றும் 2022-23-ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கையினையும் நிதியமைச்சர், மார்ச் 28-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். மார்ச் 20-ல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும்” என்று கூறினார்.