மதுரை:
கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழா நிகழ்சிகளில் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கரகாட்டம் நடத்தவும் பல நிபந்தனைகள் விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைகளான கும்பாட்டம் , கரகாட்டம், பொய்க்கால் குதிரை , தெருக்கூத்து, பாவைக்கூத்து, கோலாட்டம் , சிலம்பம், கும்மி, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம் போன்ற கலைகளில் பெரும்பாலானனவை தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பது பற்றியோ, அந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. இதனால் இந்த அரிய கலைகள் அழிந்து வருகின்றன.
ஒருசில இடங்களில் மட்டுமே நடைபெற்று வரும் பாரம்பரியமான நிகழ்சிக்கும் தற்போது மதுரை ஐகோர்ட்டு கிளை பல நிபந்தனைகளை விதித்து உள்ளது.
நிபந்தனைகள்: கதகளி நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆபாசமாக நடனம் ஆடவோ, வசனங்கள் பேசவோ கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சியையோ, சாதி, மதத்தை விமர்சிக்கும் வகையிலோ நடனம் ஆடக்கூடாது. விழாவில் அரசியல் கட்சி தலைவரையோ சமுதாய தலைவரையோ வாழ்த்தி விளம்பர பேனர்கள் வைக்க கூடாது.‘ மது அருந்திய வர்களை நடனம் ஆட அனுமதிக்க கூடாது.
நிகழ்ச்சியில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடந்தால் விழாக்குழுவினர் பொறுப்பேற்க வேண்டும்.
விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி உடனடியாக தலையிட்டு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
மதுரை ஐகோர்ட்டு கிளையின் இந்த உத்தரவு காரணமாக வரும் காலங்களில் ஒருசில இடங்களில் நடைபெறும் பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகளும் இனிமேல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே நம்பப்படுகிறது.