சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் தனித்து போட்டியிடும்,  வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக  தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற  தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் 17ந்தேதி மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இந்த தேர்தலில், நடிகர் மன்சூர் அலிகான், தனது இந்திய புலிகள் கட்சி சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் பலாபழத்தை கொடுத்து வாக்கு சேகரித்து வந்தார். நேற்று முன்தினம்,  வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றபோது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கட்சியினர்,  குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில்,  மேல் சிகிச்சைக்காக குடியாத்தத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டார். சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக மன்சூர் அலிகான்  நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு மோர் குடுத்தாங்க… குடித்த உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்… மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னையில் உள்ள K.M. நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க. டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ.ல அட்மிட் பண்ணி, இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக சிகிச்சை கொடுத்தார்கள் என குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.