னாஜி

கோவா முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதை தடுக்க ஊதியத்தை உயர்த்தப் போவதாக கூறி உள்ளார்.

நேற்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப் படுவது குறித்து தனது உரையில் தெரிவித்தார்.

மனோகர் பாரிக்கர், “நான் கோவா சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தப் போகிறேன்.  அதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு பணம் இல்லை என்றால் அவர்கள் ஊழல் செய்யக்கூடும்.  அதை நிறுத்தவே நான் ஊதிய உயர்வு அளிக்க உத்தேசித்துள்ளேன்.   இதனால் ஊதிய உயர்வு பெற்றதும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் சுத்தமானவர்கள் ஆகிவிடுவார்கள் எனப் பொருள் இல்லை.  ஆனால் ஊழல் புரிய அவர்களுக்கு காரணம் கிடைக்காமல் போகும் என்பதே.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தேவை அதிகமாக உள்ளது.  பல நன்கொடைகள் அவர்கள் அளிக்க வேண்டி உள்ளது.  இந்த உறுப்பினர் பணி என்பது நாள் முழுவதும் உழைக்க வேண்டிய பணி ஆகும்.  அதனால் அவர்கள் வேறு ஏதும் தொழில் செய்து பணம் ஈட்ட முடியாத நிலையில் உள்ளனர்.  எனவே இந்த ஊதிய உயர்வு மிகவும் அவசியமானது என நான் கருதுகிறேன்.

மக்கள் எப்போதுமே அதிகம் நன்கொடை கொடுப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர்.   நல்லவர்கள் அதனால் தான் தேர்தலில் தோல்வி அடைகின்றனர்.   மக்கள் தங்களை தேர்வு செய்ய பணத்தை நன்கொடையாக உறுப்பினர்கள் அளிக்க வேண்டி உள்ளது.   அதனால் போதிய பண வருவாய் இல்லை எனில் அவர்கள் ஊழல் செய்யத் துவங்குகிறார்கள்.   மக்கள் தங்களின் தேர்வு முறையை மாற்றி நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது ஊழல்வாதிகள் காணாமல் போய் விடுவார்கள்.   எனவே ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களும் ஊழலுக்கு ஒரு காரணம்” என கூறினார்.