அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு: மன்மோகன் சிங், ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு

Must read

டெல்லி: அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதில், கொரோனா பாதிப்பு காரணமாக சுகாதாரத்துறை மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு தரப்பு மக்களின் நலனுக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.

எனவே, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான அகவிலைப் படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியின்படி தொகை வழங்கப்படும்.

அரசின் நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டில் ரூ. 37,350 கோடி மிச்சம் ஏற்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸின் முக்கியப் புள்ளியான ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் Zoom கான்ஃபரென்ஸ் அழைப்பு மூலம், மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர்.

இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருப்பதாவது: தற்போது உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இதைப் போன்ற கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இதுபற்றி ராகுல் காந்தி கூறியதாவது: டெல்லியை அழுகப்படுத்த அவர்கள் மிகப் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளார்கள். நடுத்தர மக்கள் கையிலிருக்கும் பணத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்காமல் இதைப் போல ஆடம்பர செலவுகளுக்குக் கொடுக்கிறது இந்த மத்திய அரசு என்று சாடினார்.

இந்த விவகாரம் பற்றி ப.சிதம்பரம், புல்லட் ரயில் திட்டம், டெல்லியை அழகப்படுத்தும் திட்டம் உள்ளிட்டவைகளுக்குத் தான் முதலில் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் அகவிலைப்படி உயர்வு பற்றி யோசித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகம் உட்பட டெல்லியில் உள்ள பல கட்டுமானங்களை மறுக்கட்டமைப்பு செய்யும் நோக்கில் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, மும்மை – குஜராத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article