டில்லி

த்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளையாட்டுகளை அரசியலாக்குவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகம் தேசிய விளையாட்டு மையத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.    அந்தக் கடிதத்தில் கடந்த 4 வருடங்களாக இந்தியா எவ்வளவு பதக்கங்கள் பெற்றுள்ளன என்னும் விவரம் கேட்கப்பட்டுள்ளது.    இதற்கு முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான மனீஷ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சகத்தின் இந்த கடிதம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “இது விளையாட்டுகளை அரசியலாக்கும் முயற்சி இல்லையா?  அமைச்சகம் வேண்டும் என்றே இந்த 4 வருடங்களில் பெற்றுள்ள பதக்க விவரம் கேட்பது தங்களின் சாதனைகளை பரைசாற்றவா அல்லது முந்தைய அரசை குறை கூறவா?   பாஜக அரசின் இந்த செய்கை அவமானகரமானது”  என பதிந்துள்ளார்.

இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் எதுவும் கூற மறுத்து விட்டார்.   அமைச்சக அதிகாரி ஒருவர் ”இவ்வாறு கேட்கப்பட்டது உண்மை தான்.  இது ஒப்பிடுவதற்காகவோ துறையைப் பற்றி பெருமை கூறவோ கேட்கப்பட்டதில்லை”  என தெரிவித்துள்ளார்.