டில்லி

முன்னாள் தேர்தல் ஆணையர் டி என் சேஷன் மரணம் அடைந்ததாக பரவிய பொய் செய்தியை மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி மற்றும் ஜிதேந்திர சிங் வெளியுட்டது கண்டனத்தை கிளப்பி உள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் தேதி முன்னாள் தேர்தல் ஆணையர் டி என் சேஷனின் மனைவி ஜெயலட்சுமி சேஷன் மரணம் அடைந்தார்.   அவர் மரணம் அடைந்த அடுத்த நாளே சேஷனும் மரணம் அடைந்ததாக செய்திகள் பரவின.    அதை ஒரு சில செய்தி ஊடகங்கள் ஆராய்ந்து சேஷனின் உறவினரிடம் விசாரித்தன.   அதைத் தொடர்ந்து அது தவறான செய்தி எனவும் சேஷன் நலமுடன் உள்ளார் எனவும் அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

இது நடந்து சுமார் 5 அல்லது 6 நாட்கள் கழித்து இந்த செய்தியை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  ஜிதேந்திர சிங் வடகிழக்கு இந்தியா முன்னேற்றத் துறையில் அமைச்சராக பணி புரிபவர் ஆவார்,    இதைத் தொடர்ந்து அதை சுட்டிக்காட்டி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரும் சேஷனின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து செய்தி அளித்துள்ளார்.

அமைச்சர் இது போல பொய்ச் செய்தி என உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை பதிந்தது பலரின் கண்டனத்தை கிளப்பி உள்ளது.    அத்துடன் இந்த செய்தி வெளியிடும் முன்பு பொய்ச் செய்தி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிரிதி இரானி அறிவித்ததும் பிறகு பிரதமர் மோடி அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.