டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி, 2 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த கலவரத்தை அமைதிப்படுத்த பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ள நிலையிலும், பழங்குடியினர் கலவரத்தை நீட்டித்து வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவி வரும் காணொலியில் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேதி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் தனது அதிருப்தியை தெரிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது” என்றார்.
“என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிரம்பியுள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. அனைத்து முதல்வர் களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் – குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது ராஜஸ்தான், சத்திஷ்கர் அல்லது மணிப்பூரின் எந்த மூலையிலும் அல்லது நாட்டின் எந்த மூலையில் நடந்தாலும் அது வெட்கக்கேடு, இதற்குப் பின்னால் இருப்பவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் என்றார்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றதுக்கு சென்றுள்ள நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், , மணிப்பூரில் பெண்களை அவிழ்த்து அணிவகுத்து செல்லும் வீடியோக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில், “அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம் இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என எச்சரித்தார்.