இம்பால்: மணிப்பூர் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அம்மாநில மெய்தி மக்களிடம் ஏற்பட்ட மோதலுக்காக குகிசோ மக்களிடம் பழங்குடித் தலைவர் மன்றம் மன்னிப்புக் கோரி உள்ளது.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு, கிறித்துவத்தைப் பின்பற்றிய குகி சமூகம் பழங்குடி அந்தஸ்தைப் பெற்றது. அதே சமயம் மெய்தி இந்துக்கள் பட்டியல் சாதியாக மாறினார்கள். மெய்தி மக்கள் குகி பகுதிகளில் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், இப்போது அவர்களும் பழங்குடி அந்தஸ்து கோருவதே மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மணிப்பூரில் 53 சதவீதம் இருக்குமு் மெய்தி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மெய்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடி யினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றைய (ஜூலை 11ந்தேதி) விசாரணையின்போது, மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில், மணிப்பூரில் கடந்த 2மாதங்களில் நடந்த வன்முறையில் மொத்தம் 142 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க 5,995 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6,745 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 6 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மே மாதத்தில் இருந்து மாநிலத்தில் 5,000 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்,   “மாநிலத்தில் ஏற்கெனவே வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வன்முறைகளுக்கு தூபம் போடுவது போல் இங்கு நடைபெறும் வழக்கு விசாரணைகளைக் காரணமாக்கி விடக்கூடாது. நாங்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப்போ அல்ல பாதுகாப்பு வழங்கும் அமைப்பு அல்ல” என்று தெரிவித்தது.

இந்த நிலையில்  மணிப்பூர் வன்முறை தொடர்பாக பழங்குடி இனத்தவரான குகிசோ  சமூக தலைவர், தனது இன மக்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார். “தவறான வழிகாட்டுதல் காரணமாகவே, மெய்தி   மக்களுடன் மோதல் நடைபெற்றுள்ளது. இதற்காக குகி சோ மக்களிடம் பழங்குடித் தலைவர் மன்றம் மன்னிப்புக் கோருவதாக அறிவித்து உள்ளது.

பழங்குடியின தலைவர் மன்றம் மன்னிப்பு கோரியிருப்பதால், அங்கு நடைபெற்று வரும் வன்முறை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.