மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.

விடுமுறையில் வீட்டிற்கு வந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் தனது 10 வயது மகனுடன் வீட்டின் முன்னே வேலை செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி வெள்ளை நிற காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இம்பால் அருகே உள்ள மணிப்பூரின் லீமாகாங் ராணுவ முகாமில் பணிபுரியும் செர்டோ தாங்தாங் கோம் விடுமுறையில் இம்பாலில் உள்ள தாருங் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

நேற்று காலை 10 மணி அளவில் தனது மகனுடன் வீட்டின் தாழ்வாரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கடத்தியதாக ஒரே சாட்சியான அவரது 10 வயது மகன் தனது வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து செர்டோ தாங்தாங் கோம்-மை தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அவரது உறவினர்கள் இன்று காலை இம்பாலின் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள குனிங்தேக் கிராமத்தில் அவரது உடலை கண்டுபிடித்துள்ளனர்.

தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடந்த சடலம் சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் உடையது தான் என்று அவரது சகோதரரும் மைத்துனரும் உறுதிப்படுத்தினர்.

மனைவி, மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்துவந்த சிப்பாய் கோம் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு ராணுவ அதிகாரிகள் அங்கு விரைந்துள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.