டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. 5நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. நாடாளுமன்ற 75ஆண்டு கால பயணத்தொடர் குறித்த அனுபவங்களை பகிர்வதற்காக இந்த கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக உள்பட அனைத்துக்கட்சிகளும், இப்போதே தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.  மோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில்,  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல்  (செப்டம்பர் 18ந்தேதி) வருகிற 22ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது. மேலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்றும், முதலில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், அதன்பிறகு, புதிய கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற செயலகம்  அறிவித்து உள்ளது.

அதன்படி, இன்றைய முதல் நாள் நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்திலும் எஞ்சிய நான்கு நாட்கள் புதிய கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழு புகைப்படம் எடுக்கப்படும் எனவும் புதிய கட்டிடத்திற்கு அனைவரும் செல்வோம் என்றும் கூறியுள்ளார்.

பார்லிமென்டின், 75வது ஆண்டையொட்டியே இந்தக் கூட்டத் தொடர் நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்த கூட்டத்தொடரில், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிப்பது தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் இதழ்கள் பதிவு மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

ஆனால், வேறு ஏதோ ஒரு திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதாகஎதிர்க்கட்சிகள் கூறுகின்றன. யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பு, இந்தக் கூட்டத்தொடரில் இடம் பெறலாம் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.