சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்த வன்னியர்களுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய விவாதத்தின்போது, சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் சிறப்பு அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது,தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் தனி இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டு தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் அதை உறுத்திப்படுத்தும் வகையில் ஏற்கனவே வன்னியர்களுக்கு 10.5. உள் தனி இடஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிட்டார்.
இன்று சட்டப்பேரவை விதி 110ன் கீழ், இன்று வன்னியர் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு 4 கோடி ரூபாய் செலவில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார்.