மதுரை
ராமநாதபுரம் கல்லூரி மாணவர் விஷம் குடித்து இறந்ததாக தடயவியல்துறை அறிக்கை வழங்கியதாகக் கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்
கடந்த 4 ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவர் காவல்துறை தாக்கியதால் மரணம் அடைந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையொட்டி அவரது உடலை மீண்டும் உடற்கூராய்வு செய்ய உத்தரவு இடப்பட்டது. இந்த ஆய்வில் 2 மருத்துவர்கள், மற்றும் மணிகண்டன் குடும்பத்தின் சார்பில் ஒரு மருத்துவர் முன்னிலையில் உடற்கூராய்வ் நடந்தது.
இது குறித்துக் கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், “கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு கல்லூரி மாணவன் மணிகண்டன் அழைத்து வரப்பட்டார். அங்கு வாகனத் தணிக்கை நடந்தபோது மணிகண்டனும் அவரது நண்பரும் பைக்கில் வந்து நிற்காமல் சென்றுள்ளனர். அவரை காவல்துறையினர் விரட்டியபோது நண்பர் தப்பிவிட மணிகண்டனை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
விசாரணையில் அவரிடம் பைக்குக்கு உரிய ஆவணமில்லை என்பது தெரிந்து அவரது தாயாரை மொபைல் மூலம் அழைத்து அவரிடம் மணிகண்டனை 8.15 மணிக்கு அனுப்பி உள்ளனர். காவல் நிலைய சிசிடிவி காமிராவில் இவை பதிவாகி உள்ளன. இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு மணிகண்டன் உயிர் இழந்துள்ளார். அவரை ஆம்புலன்சில் எடுத்து வரும்போது வழியில் அவர் இறந்துள்ளார்.
ஆனால் அவரது தம்பி அலெக்ஸ் பாண்டியன் காவல்துறையினர் தாக்கியதில் மணிகண்டன் உயிர் இழந்ததாகப் புகார் அளித்தார் இதையொட்டி டிஎஸ்பி அளவில் விசாரணை நடந்தது. மேலும் 5 ஆம் தேதி இரு மருத்துவர்கள் மற்றும் மாணவரின் சார்பில் ஒரு மருத்துவர் ஆகிய குழுவினர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இதில் குடும்பத்தினருக்குத் திருப்தி இல்லாததால் மீண்டும் 8 ஆம் தேதி மறு பிரேதப் பரிசோதனை நடந்தது. இரு சோதனைகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
தடயவியல் அறிவியல்; குழுவினர் மணிகண்டன் உடல் உறுப்புக்களை ஆய்வு செய்து வழங்கிய இறுதி அறிக்கை மூலம் மணிகண்டன் விஷம் குடித்து இறந்தது தெரிய வந்துள்ளது. அவரை காவல்துறையினர் தாக்கியோ அடித்த உயிர் இழக்கவில்லை என்பதும் தெரிந்தது. மணிகண்டன் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மணிகண்டன் உடன் வந்த நபர் யார் என்பது குறித்தும் மணிகண்டன் பயன்படுத்திய பைக் திருடப்பட்டதா என்பது குறித்தும் மேலும் விசாரணை நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.