மங்களூரு: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மங்களூரு  குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியபோது படுகாயமடைந்து சிக்கிய பயங்கரவாதி மொகமது ஷாரிக் ( H. Mohammad Shariq) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.

2022ம்  ஆண்டு  கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் காரில் இருந்த முபின் என்ற பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்தார். இதைத்தொடர்ந்து 2022 நவம்பர் மாதம் நவம்பர் மாதம் 19-ந் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. அந்த ஆட்டோவில் வெடிகுண்டுடன் பயணம் செய்த, மொகமது  ஷாரிக் என்ற பயங்கரவாதி, வெடிகுண்டின் வாயை திறக்கும்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தது.

இதில், பயங்கரவாதி முகமது ஷாரிக் என்கிற ஷாரிக்(வயது 24) பலத்த தீக்காயம் அடைந்தார். முதலில் அவர் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் இருந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து,நேற்று மதியம் (மார்ச் 7, 2023) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, பயங்கரவாதி ஷாரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஷாரிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷாரிக் வாயை திறக்கும் பட்சத்தில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.