சென்னை: மாண்டல் புயல் காரணமாக, இன்று, நாளை நடைபெற இருந்த பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்பதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், , பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்பட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளுவர், அண்ணாமலை, பாரதிதாசன், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் தேர்வுகளும் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 16ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

‘சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் வருவதை தவிர்க்கும் படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகில் இருக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.  மேலும், அண்ணா, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.