சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக,  கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது.  இதற்கு மாண்டஸ் புயல் என அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து 640 கி.மீட்டர் தூரத்தில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது சென்னையை நோக்கி மணிக்கு 5 கிலோ மீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இதனால்  சென்னையின் பல இடங்களில் இன்று காலை முதலே லேசான மழை  பெய்து வருகிறது.

 இந்த புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலாபனது  நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலைக்குள் இந்த புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையை கடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக நல்ல மழை பெய்வதுடன் கரையை கடக்கும் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்பட 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 10 மணி வரை மேற்கண்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. கல்பாக்கம், கடலூர், மரக்காணம் பகுதியில் கடும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.