சென்னை: தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு போட்டிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு,  எருது விடுதல் போன்ற போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி,  ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்த போட்டிகள் நடைபெற தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மஞ்சு விரட்டு என்பது, அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டாகும். கோபத்தில் உள்ள காளைகள், ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு விரட்டப்படும்.  அந்த காளைகளின் கழுத்தில் கொப்பரை மாலை போடப்பட்டிருக்கும். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காளையில் கழுத்தில் உள்ள கொப்பரை மாலையை கழற்ற வேண்டும். காளைகளை பிடித்து மாலையை கழற்றும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த  நிலையில்  ஜல்லிக்கட்டு போலவே, மஞ்சுவிரட்டுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மஞ்சுவிரட்டு நடத்த உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்கு முன்பே www.Jallikattu.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

காளைகள் வரிசைப்படுத்தும் இடம், பரிசோதனை செய்யும் இடம், காளைகள் சேகரிப்பு இடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக் கூடாது. வரைமுறையின்றி காளைகளை அவிழ்த்துவிடுவது கூடாது. அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்டோர் மட்டுமின்றி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஏற்பாட்டாளர்கள் நபருக்கு ரூ.5 லட்சம் வீதம் 20 பார்வையாளர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெறும் வகையில் பிரீமியம் செலுத்தி, காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதியவழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.