மனதில் நிற்கும் மகாமகங்கள்: ஜ. பாக்கியவதி

கடந்த ஆண்டு இதே நாளில் மகாமகம் சென்ற நினைவாக….

கும்பகோணம் என்றால் கோயில்கள். காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக கும்பகோணத்தைக் கோயில் மாநகரம் என்று கூறுவர். ஆண்டுக்கொரு முறை வருவது மாசி மகம். குறிஞ்சி மலர் பூப்பது 12 ஆண்டுக்கொரு முறை. அதுபோல பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை வருவது மகாமகம். குறிஞ்சி மலர் பூத்ததை பார்த்த அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் முதன்முதலாக நான் பார்த்த மகாமகத்தை என்னால் மறக்க முடியாது. இதுவரை மூன்று மகாமகங்களை நான் பார்த்துள்ளேன்.

1980 மகாமகம்
1980இல் கும்பகோணத்திற்கு மகாமகத்திற்கு என் பெற்றோர் சென்றுவந்து அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் முதன்முதலாக மகாமகத்தைப் பற்றி அறிந்தேன்.

1992 மகாமகம்
நான் ஆவலோடு விசாரித்த கும்பகோணத்திற்கே திருமணம் ஆகிவருவேன் என நான் எதிர்பார்க்க வில்லை. அதற்கு முன் கோயில்களுக்கு அதிகம் சென்றதில்லை. புகுந்த இடம் கும்பகோணம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலுள்ளோருடன் அடிக்கடி கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் ஆரம்பித்தது. விழா நாட்களில் மாமியார் கோயில்களுக்கு அனுப்பிவைப்பார். நாளடைவில் கோயில்கள்  மற்றும் விழாக்களின் மீதான ஆர்வம் அதிகமாகியது.  இந்த சூழலில் 1992இல் முதல் மகாமகம் காணும் வாய்ப்பு கிடைத்தது.

மகாமகத்திற்காக கோயில்களுக்கு வர்ணம் பூசி, சுண்ணாம்பு அடித்து சுத்தம் செய்து கும்பாபிஷேகம் செய்வதைக் கண்டேன். வீடுகள், கடைகள், சாலையோரங்கள், உணவு விடுதிகள், பேருந்துகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களும் பொலிவுடன் காட்சியளித்தன. நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் தன் சொந்த வீட்டு விழாவிற்கு அழைப்பதுபோல் மகாமகத்திற்கு அழைப்பதைக் கண்டேன். அவ்வாறு அழைப்பதை கும்பகோணத்தில் உள்ளோர் பெருமையாகக் கருதுகின்றனர். பெரிய குடும்பம், கூட்டுக்குடும்பம், போன்ற வீடுகளில் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு விருந்தினர்கள் வருவதால், சமையலுக்கு  ஆட்கள் வைத்திருப்பதைக் காணமுடிந்தது. வீட்டில் உள்ளவர்களும், அனைத்து கோயில்களிலும், சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வார்கள்.

மகாமகத்திற்குத் தயாராகும் குளம் (ஜனவரி 2016)

1992 மகாமகத்திற்கு மாமியார் வீட்டோடு அனைவரும் மகாமகம் காணச் சென்றோம். மகாமகம் கொண்டாடப்பட்ட நாள்களில் தினமும் சைவ, வைணவ கோயில்களுக்குச் சென்றோம். முதல் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மூத்த மகன் எங்களுடன் வந்தான். அதிக கூட்டமாக இருக்கும் என அருகிலுள்ளோர் கூறியதால் இரண்டே வயதான என் இளைய மகனை வீட்டில் பெரியவர்களிடம் விட்டுவிட்டு வந்தோம். மகாமகக் குளத்தருகே கும்பேஸ்வரர் உள்ளிட்ட சைவக்கோயில்களின் உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அந்நேரத்தில் குளித்தால் புண்ணியம் என்று கூறுகின்றனர். மகாமகக்குளத்தில் புனித நீராடியபின்னர் அங்கிருந்து நடந்தபடியே பொற்றாமரைக்குளம் வந்தோம்.  குளத்தில் நீராடியபின் அங்கிருந்து காவேரியாற்றுக்குச் சென்று நீராடினோம்.  இவ்வாறாக ஒரே நாளில் மூன்று  புனித தீர்த்தங்களில் நீராடியதை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.

2004 மகாமகம்
மகன்கள் வளர்ந்துவிட்ட நிலையில் அவர்களோடு புனித நீராடச் சென்றோம். இந்த முறை புகைவண்டியில் சென்றோம். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதிகமாக சிறப்புப் புகைவண்டிகளை அரசு ஏற்பர்டு செய்திருந்தது. புகைவண்டியின் இருபுறமும் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்ததால், புகைவண்டி முன்னும் பின்னும் செல்லும் வசதியுடன் இருந்தது. சென்ற மகாமகத்தைவிட அதிகமாக கூட்டத்தைக் கண்டோம். எங்களுக்கிருந்த ஆர்வம் எங்கள் மகன்களிடமும் இருந்ததை நினைத்துப் பெருமையடைந்தோம். கடந்த மகாமகத்தைவிட இந்த மகாமகத்தின்போது கூட்டத்தைக் கட்டுப் படுத்துவதற்காக ஆங்காங்கே தடுப்பு கட்டி பக்தர்களை வரிசையாக ஒருங்கிணைத்து குளத்தில் இறங்கச் செய்தனர். மகாமகக்குளத்தில் தண்ணீர் குறைவாகவே காணப்பட்டது. அவ்வாறே பொற்றாமரைக்குளமும் குறைந்த தண்ணீருடன் இருந்தது. காவேரியாற்றில் நீரின் ஓட்டம் இருந்தது. செல்லும் இடமெல்லாம், பார்க்கும் இடமெல்லாம் பல ஊர்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்த பக்தர்களின் கூட்டத்தைக் காணமுடிந்தது. புனித நீராடும் இடங்களில், பெண்கள் பலர் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களப்பொருட்களை பிற பெண்களுக்கு கொடுப்பதை காண முடிந்தது. இந்த மகாமகத்தின்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 360 டிகிரியில் இயங்கும் டூம் கேமராவை முதன்முதலாகப் பார்த்தோம். ஆச்சர்யமாக இருந்தது.

மகாமகத்திற்குத் தயாரான மகாமகக்குளம் (ஜனவரி 2016)

2016 மகாமகம்
மகாமகத்திற்காக தயாரான 2015 முதல் கும்பகோணத்தைக் காண பலமுறை சென்றோம்.   மாசி மகம் தொடங்கி கிட்டத்தட்ட மகாமகம் நிறைவு நாள் வரை எங்களின் பயணம் தொடர்ந்தது.

மகாமத்திற்காக பல கோயில்கள் குடமுழுக்கு கண்டன. அவற்றில் பல கோயில்களின் குடமுழுக்கினைக் கண்டோம். கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் கோயில்கள் உட்பட பல சைவ, மற்றும் வைணவக் கோயில்களின் தேரோட்டம் கண்டோம்.

மகாமக நாளன்று காலை 4.00 மணியளவில் தஞ்சையிலிருந்து புகைவண்டியில் புறப்பட்டு 6.00 மணிவாக்கில் குடும்பத்துடன் கும்பகோணம் சென்றடைந்தோம். இதற்கு முன் இரு மகாமகத்தின்போதும் எந்த போட்டோவும் எடுக்கவில்லை. முதல் மகாமகத்தின்போது எங்கள் இளைய மகனுக்கு வயது இரண்டு. நான் பார்க்கும் இந்த மூன்றாவது மகாமகத்தில் எங்கள் பேரனுக்கு வயது இரண்டு. கும்பகோணமே மாறிப்போயிருந்தது.

கும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் (2015 மாசி மகம்)

கடைகள், வீடுகள், கோயில்கள், குளங்கள் அனைத்தும் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிவறைகள் உள்ளிட்ட பல வசதிகள் ஆங்காங்கே இருந்தன. போகும் வழிகளிலும், வீடுகளிலும் அன்னதானம், நீர்மோர் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கார், வேன், பேருந்துகள் என அனைத்தும் நிற்பதற்கு நகரை விட்டு வெளியே பல இடங்களில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புகைவண்டியில் சென்றதால் மகாமகக்குளம் பக்கமாக இருந்த நிலையில் வெகு விரைவில் குளத்தை அடைந்தோம். மகாமகக்குளம், பொற்றாமரைக்குளம், காவிரியாறு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு ஆங்காங்கே பல வழிகாட்டிப்பலகைகள் வைத்திருந்தார்கள். தெரியாதவர்கள் போனாலும்கூட குளத்திற்குச் செல்ல நான்கு திசைகளிலும் இருந்த இந்த வழிகாட்டிகள் உதவின. பல இடங்களில் கேமராக்கள் வைத்திருந்தனர். ஒலிபெருக்கியில் மக்களை கவனமாக இருக்கும்படி காவலர்கள் அறிவுறுத்தினர். நாங்கள் மகாமகக்குளத்தில் குளித்துவிட்டு, அங்கிருந்து பொற்றாமரைக்குளத்திற்கும் பின்னர் காவிரியாற்றுக்கும் சென்றோம். மகாமகக்குளத்தில் குளிப்பதற்கு முன்பாக அபிமுகேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தோம். எங்கு பார்த்தாலும் தேநீர்க்கடைகளும், பிற கடைகளும் இருந்தன.


மகாமக அனுபவங்கள் மறக்கமுடியாதவை. நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியது போல நம் பிள்ளைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் நம் பண்பாட்டின், கலையின் பெருமையை எடுத்துக்கூறுவோம்.


English Summary
Manathil Nirkum Mahamagam, Packiayavathy