கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த கவுன்சிலர்கள் கட்டாயம் பின்விளைவுகளை சந்திப்பார்கள் என்று எச்சரித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அவர் கூறியுள்ளதாவது, “தங்களின் பேராசை மற்றும் சுயநல நோக்கத்திற்காகவும், தாங்கள் செய்த மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நப்பாசையுடனும் கட்சி மாறியுள்ளனர் பல கவுன்சிலர்கள்.

ஆனால், அவர்களின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது. அவர்கள் செய்த தவறுகளுக்கான பலனை எப்படியும் கட்டாயம் அனுபவித்தே தீர வேண்டும். அவர்களின் பின்னால் பாரதீய ஜனதா இருந்து முட்டுக் கொடுத்தாலும்கூட அவர்களால் தப்பிக்க முடியாது.

கட்சியிலிருந்து விலகிவிட்டால் தாம் செய்த தவறுகளையெல்லாம் மறந்து விடுவார்கள் என்று அவர்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது” என்று எச்சரித்துள்ளார் மம்தா பானர்ஜி.

சில நாட்களுக்கு முன்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்களும், 50 கவுன்சிலர்களும் பாரதீய ஜனதாவுக்கு மாறினார்கள் என்பது நினைவிருக்கலாம்.