முசாபர்பூர்

பீகாரில் முசாபர்பூர் நகரில் 152 குழந்தைகளை பலி வாங்கிய அக்யூட் என்சிபாலிடிஸ் சிண்ட்றோம் மேலும் 20 மாட்டங்களில் பரவி உள்ளது.

ஏஈஎஸ் என அழைக்கப்படும் அக்யூட் என்சிபாலிடிஸ் சிண்ட்ரோம் என்னும் நோய் பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் பரவி உள்ளது.    இதுவரை அதிகாரபூர்மாக  இந்நோயினால் 152 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.   ஆனால்  இவ்வாறு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 200 க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.   மருத்துவ மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிருக்கு  போராடிக் கொண்டுள்ளனர்.

இந்த மரணத்துக்கு முக்கிய காரணம் பீகார் மாநிலத்தின் மோசமான சுகாதார பாதுகாப்பு சூழல் என பலரும் குறை கூறுகின்றனர்.   இந்நிலையில் நேற்று முசாபர்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டின் கூறை இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகி நகரே பரபரப்பில் ஆழ்ந்தது.   மருத்துவமனை சூப்பிரண்ட் சுனில்குமார், “ கூறையில் பூசப்பட்டிருந்த பூச்சு மட்டுமே விழுந்தது.  கூறை விழவில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் பல இடங்களில் இந்த ஏஈஎஸ் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் இதுவரை 20 மாவட்டங்களில் இந்த நோய்  பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    இதனால் பீகார் மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நிலைமை ஆராயப்பட்டு வருகிறது.  அந்தக் குழு இந்த மரணங்களுக்கு காரணம் மாநில அரசின் செயல்படாத தன்மையே காரணம் என தெரிவித்துள்ளது.  அத்துடன்  இந்த நோய் பரவுதலை தடுக்க மத்திய சுகாதாரத் துறை நிபுணர்கள் உதவ வேண்டும் என அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு எட்டு வயது சிறுவன் மூளைக்காய்ச்சல் என்னும் சந்தேகத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.   அவரது மரணம் இந்த ஏஈஎஸ் நோயினால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.   அந்த சிறுவனின் பரிசோதனை முடிவுகள் வரும்வரை நோய் குறித்து உறுதியாக சொல்ல முடியாது என மத்திய பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது