மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி நேற்று துறவறம் பூண்டார்.

1991ம் ஆண்டு தமிழில் வெளியான நண்பர்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த மம்தா குல்கர்னி அதன் பின் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.

2000மாவது ஆண்டில் திரைத்துறைக்கு முழுக்கு போட்டு வெளிநாடு சென்ற அவர் அவ்வப்போது இந்தியா வந்து சென்றார். 2012ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சியிலும் வந்து கலந்து கொண்ட அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்ட கின்னர் அகாடா என்ற துறவிகள் மடத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட மம்தா குல்கர்னி கின்னர் அகாடாவின் தலைவரான ஆச்சார்யா லஷ்மி நாராயண் திரிபாதியை நேற்று சந்தித்து முழுத்துறவறம் பூணத் தயாராக இருப்பதாகவும் தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும் கூறினார்.

இதனை அடுத்து, இறந்தபின் குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை தனக்குத் தானே செய்து கொண்ட மம்தா குல்கர்னிக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி எனப் புதிய பெயரிடப்பட்டது. தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனிதக் குளியலை முடித்தவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும் முறைகள் துவங்கின.

இந்த நிலையில், மம்தா குல்கர்னிக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என்று பல்வேறு மடாதிபதிகள் மற்றும் துறவிகள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.

நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட ஒரு நடிகையின் பின்னணி குறித்து ஆராயாமல் திடீரென வெளிநாட்டில் இருந்து வந்த அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கி இருப்பது சைவ சமய வழிபாட்டு முறைகளை கேலிக்குரியதாக ஆக்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.