ம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது.

கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது. அதை குரு பகவானும், வாயுவும் சுமந்துகொண்டு, பூலோகத்தில் அதை பிரதிஷ்டை செய்வதற்குரிய இடத்தை தேடி அலைந்தனர். அவர்கள் பரசுராமனால் உருவாக்கப்பட்ட கேரளப் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த உருத்ர தீர்த்தக்கரையில் விக்ரகத்தை வைத்தனர். அவ்விடத்தில் சிவபெருமான் குடிகொண்டிருந்தார். தன் கோயிலின் அருகிலேயே மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கட்டும் என அவர் அருள்பாலித்தார். அவ்வூரே குருவாயூர் ஆயிற்று. சிவபெருமான் குடியிருந்த தலம் மகிமை பொருந்தியது என்பதால், “மகிமையூர்” என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மம்மியூராக மாறிவிட்டது.

கேரள பாணியில் ஓடு வேய்ந்த இக்கோயிலில், மகாவிஷ்ணு, கணபதி, சுப்ரமணியன், சாஸ்தா, பிரம்மராட்சஸ், நாகங்கள், பகவதியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளது.

ஏகாதச ருத்ராபிஷேகம் என்ற பூஜை ரூ.600 கட்டணத்தில் நடத்தப்படுகிறது. குடும்ப அமைதிக்காகவும், குறைவற்ற செல்வத்திற்காகவும் இப்பூஜை நடக்கிறது. தம்பதி பூஜை நடத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படுவதோடு நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. இது தவிர லட்சுமி நாராயண பூஜை, பிரம்மராட்சஸ பூஜை, ராகுபூஜை, நாகபூஜை, திருமணத்தடைகள் நீங்க உமாமகேஸ்வர பூஜை நடத்தப்படுகிறது.

இத்தலத்திற்கு அருகில் உள்ள திருத்தலங்கள்: அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில், அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன் )திருக்கோயில், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில்.

குருவாயூரப்பனை தரிசனம் செய்பவர்கள் மம்மியூர் மகாதேவனையும் வணங்கினால்தான் இவ்வூருக்கு வந்த முழுபலனும் கிட்டும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை. வேறு எங்கும் இல்லாத வகையில் “ரிக்வேத தாரை‘ என்னும் விசேஷ பூஜை இங்கு நடத்தப்படுகிறது. வேதங்களில் முதலாவதான ரிக்வேதத்திலிருந்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இந்த பூஜை தினமும் காலை 6.45 முதல் 7.25 வரை நடக்கிறது.

வைகாசி, ஆனி நீங்கலாக மற்ற பத்து மாதங்களிலும் இங்கு விழா உண்டு. நவராத்திரியை ஒட்டி சரஸ்வதி பூஜையன்று லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. விஜயதசமியன்று 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவியும் சங்கீதார்ச்சனை நிகழ்ச்சி நடக்கிறது. பள்ளியில் சேர இருக்கும் குழந்தைகளுக்கு எழுதுவதற்குரிய பூஜையும் அன்று நடக்கும். இந்த பூஜை செய்தால் அந்த குழந்தை மிக நன்றாக படிக்கும் என்பது நம்பிக்கை. சிவராத்திரியையொட்டி விசேஷ பூஜைகள் நடத்தப்படும். கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணியக்கூடாது. எல்லா வித பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைக்கும்.

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.