கொல்கத்தா

த்திய அரசு 100 கோடி தடுப்பூசி போட்டதாகப் பாசாங்கு செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாட்டில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாக அறிவித்தது.  இது பாஜக அரசின் சாதனை என பிரதமர் மோடி பேசினார்.  ஆனால் இது தவறான தகவல் என சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவ்த் கூறி உள்ளார்.   இது குறித்து தாம் நிரூபிக்கத் தயார் என அவர் சவால் விடுத்துள்ளார்/

இன்று சிலிகுரியில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டால் மாட்டுமே தடுப்பூசி போடுதல் என்பது நிறைவடையும்.   இதுவரை இந்தியாவில் 29.51 கோடி பேர் மட்டுமே இரு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.  மத்திய அரசு நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட்டி விட்டதாகப் பாசாங்கு செய்து வருகிறது.

அடுத்த சில மாதங்களில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.   ஆனால் பெரியவர்களுக்கே தேவையான தடுப்பூசி இல்லை. சுமார் 14 கோடி தேவை உள்ள மேற்கு வங்கத்துக்கு இதுவரை 7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.  அவற்றை நாங்கள் மக்களுக்குப் போட்டுள்ளோம்.  மேற்கு வங்கத்தை விட மகாராஷ்டிராவுக்கு அதிக அளவு தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.