கொல்கத்தா

திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா பதவி பறிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா மக்களவையில் பேச லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி எதிர்க்கட்சி எம் பி க்கள் இன்று நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,

”பாஜக அரசு திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவை வெளியேற்றியது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நடந்த துரோகம். நாங்கள் மகுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்ட விதத்தை கண்டிக்கிறோம். எங்கள் கட்சி அவருடன் நிற்கிறது.  பழிவாங்கும் அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது. 

இதன்மூலம் அவர்களால் எங்களை தோற்கடிக்க முடியாது. எங்களுக்கு இது ஒரு சோகமான நாள். மகுவா மொய்த்ரா தனது நிலைப்பாட்டை விளக்கக்கூட பாஜக அனுமதிக்கவில்லை. விரைவில் மொய்த்ரா ஒரு பெரிய ஆணையுடன் நாடாளுமன்றத்திற்கு திரும்புவார். 

பாஜக தங்களுக்குப் பெரிதளவில் பெரும்பான்மை இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறது. ஒருநாள் அவர்கள் ஆட்சியில் இல்லாத ஒரு நாள் வரக்கூடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதுபோன்ற மனவருத்தம் தரும் செயல்களால் பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது.” 

என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.