கொல்கத்தா: வேளாண் சட்டம் வாபஸ், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் காரணமாக ஆலோசனை நடத்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார். அங்கு நாள் முகாமிடும் அவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி  உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வேளாண் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக போராடி வந்த நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த சட்டத்தை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாபஸ் பெறுவதற்கான நடவடிககைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார். 2 நாட்கள் டெல்லியில் முகாமிடும் அவர்,  பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மேற்குவங்கம் – வங்கதேசம் எல்லையில் பி.எஸ்.எப் படையின் அதிகார வரம்பை அதிகரித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், பெகாசஸ் விவகாரம், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசிக்கவும் முடிவு செய்தாக கூறப்படுகிறது.