கொல்கத்தா

மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில  சட்டசபை கூட்டுவதற்கான கோப்பில் கையெழுத்திடவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் 24 ஆம் தேதி முதல் மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரைத் தொடங்கி நடத்தத் திட்டமிட்டுள்ளது.  அம்மாநில ஆளுநருக்கு அதற்கு ஒப்புதல் பெறுவதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆளுநர் இதுவரை கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,

‘நமது கூட்டாட்சி அமைப்பு, முட்டி அழிக்கப்படுகிறது. சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்கான கோப்பில் ஆளுநர் இதுவரை கையெழுத்திடவில்லை. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கும் மத்திய அரசு இதுவரையிலும் அனுமதி அளிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மணிப்பூருக்குச் சென்று, அங்கு நிலைமையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்’

என்று கூறினார்.

சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பான முக்கியமான கோப்பை குறுகியகால இடைவெளியில் அனுப்பியது ஏன் என்று ஆளுநர் ஆனந்தபோஸ் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதற்கான விளக்கம் அளிப்பதற்கு உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சோபன்தேப் சட்டர்ஜியை அளுநர் அழைத்தார். அவர் வெளியூர் சென்றுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளரை தன்னை வந்து சந்திக்கும்படி ஆளுநர் கூறியுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மழைக்கால கூட்டத்தொடரைத் தொடங்குவதற்கான கோப்பில் கையெழுத்திடாததால், கூட்டத்தொடர் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலை உள்ளது.