சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தில், அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரண மாக இன்றுமுதல் மால்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, மால்களுக்கு வரும் பொது மக்களுக்கு, தமிழகஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சோதனை நடத்தப்பட்டு அனுமதிக் கப்பட்டனர்.
தமிழகத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மால்கள் அனைத்தும் திறக்க தமிழகஅரசுஅனுமதி வழங்கியது. ஷாப்பிங் மால்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சென்னையில், இன்று காலை முதல் மால்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டன. சென்னையில் உள்ள பிரபலமான ஃபீனிக்ஸ் மால், எக்ஸ்பிரஸ் மால், ஸ்பென்சர் மால், விஆர் மால் உள்பட பல்வேறு மால்கள் திறக்கப்பட்டன. முன்னதாக, நேற்றே, மால்களில் உள்ள கடை உரிமையாளர்கள், கடைகளை சுத்தப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பாக வைத்தி ருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை மால்கள் திறக்கப்பட்டதும், பொதுமக்கள் ஏராளமானோர் மால்களுக்கு வரத் தொடங்கினர்.
மால்களுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முக்கவசம் அணிந்துள்ளார்கள் என சோதனை செய்யப் பட்டதுடன், உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்து, உள்ளே அனுமதிக்கப்பட்டனர் மால்களின் வாயிலில் சானிடைசரும் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் எதிர்பார்த்த அளவில் மக்கள் வரவில்லை என்று மால் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.