டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அவரது நியமனத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் எதிர்க்கட்சித் தலைவராக  கார்கே பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது.

மாநிலங்களவைத்  எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம்நபி ஆசாத் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜுன கார்கே பெயரை பரிந்துரைத்திருந்தது. இந்த  பரிந்துரைக்கு மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்  அளித்துள்ளார்.

அதன்படி, மாநிலங்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஸ்ரீ மல்லிகார்ஜுன் கார்கே, 2021 பிப்ரவரி 16 முதல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் பெற்றுள்ளார்.

இதையடுத்து கார்கே விரைவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.