மால்களில் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் வசதி மறுக்கப்படுவது நியாயமா?

Must read

மும்பை: பொதுவாக ஆட்டோக்களுக்கு ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் மறுக்கப்படுவது ஏன்? ஆட்டோக்களுக்கு பார்க்கிங் இல்லை என்று எந்த சட்டம் சொல்கிறது? ஆட்டோக்கள் வாகனங்கள் இல்லையா? அல்லது கார் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் மால்களுக்கு வரவேண்டுமா? என்ற நியாயமான கேள்விகளுடன் உரிமைப் போராட்டத்தில் குதித்திருக்கிறார் ஒரு மும்பை இளைஞர். மால் நிர்வாகமும், காவல்துறையும் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் திணறுகிறது.

vikas1

மும்பையில் விகாஸ் திவாரி என்ற 28 வயது சாஃப்ட்வேர் இஞ்சியர் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தனது குடும்பத்துடன் அவரது உடன் பிறந்த அண்ணனின் ஆட்டோவில் மும்பையில் உள்ள ஃபோனிக்ஸ் மார்கெட் சிட்டிக்கு சென்றிருக்கிறார்.
வாசலில் வைத்து செக்யூரிட்டிகள் மறிக்கவும் விகாஸ் இறங்கி ஏன் எங்களுக்கு பார்க்கிங் அனுமதிக்க மாட்டோம் என்கிறீர்கள். செக்யூரிட்டிகள் தங்கள் பாணியில் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ஆனால் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லவே விகாஸ் உடனே தனது மொபைல் கேமராவை ஆன் செய்து நடப்பவைகளை வீடியோ பதிவு செய்ய ஆரம்பிக்கவே அடுத்து அங்கு மேலும் வந்து சேர்ந்த செக்யூரிட்டிகள் அவரை கேமராவை ஆஃப் செய்யும்படி மிரட்டவே அவர் பயப்படாமல் தொடர்ந்து அவர்களுடன் பேசயிருக்கிறார்.
விகாஸ் கேட்ட கேள்வியெல்லாம் இதுதான். ஆட்டோக்களுக்கு பார்க்கிங் இல்லை என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? அதை எனக்கு காட்டுங்கள் என்பதுதான். இக்கேள்விக்கு செக்யூரிட்டிகள் யாருக்கும் பதில் சொல்ல தெரியவில்லை. “ஆட்டோக்களுக்கு பார்க்கிங்கில் அனுமதி இல்லை” என்ற வார்த்தையை மட்டும் தொனிகளை மாற்றி மாற்றி தேய்ந்த ரெக்கார்டு போல சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்கள் அவரை மால் நிர்வாகத்திடம் பேசும்படி அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை சீருடை அணிந்த சிலர் சூழ்ந்துகொள்ள விகாஸுக்கு லேசாக உள்ளே உதறல் எடுத்திருக்கிறது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் தனது சொந்த பாதுகாப்புக்காக அவர் தனது வீடியோ பதிவை தொடர்ந்து கொண்டிருக்க. சற்று நேரத்தில் அங்கு வந்த சூப்பர்வைசரும் விகாஸின் முகத்தைப் பார்க்கக்கூட பிடிக்காமல் அலட்சியமாக தனது மொபைல் போனை நோண்டிக்கொண்டே “எங்கள் நிறுவனத்தின் சொந்த பாலிஸி இது, நாங்கள் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் அனுமதிப்பதில்லை” என்று கூறியிருக்கிறார்.

vikas2

சறறு நேரத்தில் மால் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் போலீசும் அங்கு வந்திருக்கிறது. அங்கு வந்த அவர்களோ பிரச்சனையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்தபடி அமர்ந்திருந்திருக்கிறார்கள். விகாஸ் அந்த மால் சூப்பர்வைசரிடம் “ எனது அண்ணன் ஒரு ஆட்டோ ஓட்டுநராக தினமும் நூற்றுக்கணக்கானோரை இங்கு வந்து இறக்கிச் செல்கிறார். ஆனால் அவர் இங்கு பொருள் வாங்க வரக்கூடாது என்பது என்ன நியாயம்? இப்படியொரு சட்டம் எங்கே இருக்கிறது? நாங்கள் சொந்தக் கார் வாங்கும்வரை மால்களுக்கு வரக்கூடாதா என கேள்வி எழுப்ப அதற்கும் அவர்களிடம் பதில் வரவில்லை.
கடைசியில் விகாஸ் பதிவு செய்த வீடியொவை அழித்த பிறகே அவரை அங்கிருந்து போக அனுமதித்துள்ளார்கள். ஆனால் சாஃப்ட்வேர் இஞ்சினியரான விகாஸ் சமயோஜிதமாக தான் வீடியோ பதிவை ஆரம்பித்த போதே அதை ஃபேஸ்புக் லைவ் மோடில் ஆரம்பித்தபடியால் நடந்தவையெல்லாம் லைவாக ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பாகி பலரும் மால் நிர்வாகத்தை கமண்ட்டுகளில் விளாசி தள்ளிவிட்டனர்.
மும்பை போலீசின் உதவி கமிஷனர் இதுபற்றி பேசும்போது “நாங்கள் நடந்த சம்பவத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் இப்போதைக்கு ஒன்றும் சொல்ல இயலாது” என்று கூறிவிட்டார். பத்திரிக்கைகள் மால் நிர்வாகத்தை தொடர்புகொள்ள ஆரம்பித்த போது அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் பெற இயலவில்லை. அனைவரும் தீபாவளி விடுப்பில் இருப்பதாக மட்டும் பதில் அளிக்கப்பட்டது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article