புதுடெல்லி,
ர்தார் வல்லபாய் பட்டேல் 141-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வல்லபாய் பட்டேலின்  141-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் டெல்லி பட்டேல் சவுக் பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வல்லபாய் பட்டேல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில்,
‘சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளின் போது அவர் நாட்டுக்கு ஆற்றிய அருந்தொண்டை நினைவுகூர்ந்து தலைவணங்குகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
வல்லபாய் பட்டேல் – வாழ்க்கை குறிப்பு
குஜராத் மாநிலத்தில் சராசரி விவசாயக் குடும்பத்தில் 31-10-1875 அன்று பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல், சிறுவனாக இருந்தபோது அவரது உடலில் ஒரு கட்டி வந்தது. அவரது பெற்றோர் வல்லபாயை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்து சென்றனர்.
patel
இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றார் வல்லபாய் பட்டேல்.
பள்ளிக்காலத்தில் படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்து, சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார்.
நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டனுக்கு அனுப்பி சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
அகமதாபாத்தில் வக்கீல் தொழில் செய்தபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, சமூக தொண்டின்மூலம் பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட பின்னர், வக்கீல் தொழிலை உதறிவிட்டு சுதேசி இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
குஜராத் மாநிலத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம் நிலவிய வேளையில் ஆங்கிலேய அரசிடம் வரிவிலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர்.
அந்தப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் அரசு பணியாததால் மகாத்மா காந்தி மற்றும் பட்டேல் தலைமையில் வரிகொடா இயக்கப் போராட்டம் வெடித்தது. இதற்குஅரசு பணிந்தது. வரி ரத்தானது. அரசியல் அரங்கில் பட்டேல் சந்தித்த முதல் வெற்றியாக இது அமைந்தது.
பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் பட்டேலுக்கு வெற்றி கிடைத்தது.
அன்றுமுதல் ‘படைத்தலைவர்’ என்னும் பொருள்படும் வகையில் மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன்பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
வட்டமேஜை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு காந்தி, பட்டேல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் இடையில் நெருக்கம் வளர்ந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ‘சிப்பாய்’ என்று அழைக்கப்பட்ட பட்டேல், இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான இவர், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பின்னர் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் அகன்ற இந்தியாவை உருவாக்கியதில் முன்னாள் உள்துறை மந்திரி பட்டேல் ஆற்றிய அரும்பணி போற்றுதலுக்குரியதாகும்.
வலிமையான – அகன்ற இந்தியா என்ற இலக்குக்காக அனைத்து வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
15-12-1950 அன்று தனது 75-ம் வயதில் மும்பையில் காலமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 1991-ம் ஆண்டு நாட்டின் மிகவும் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.