லண்டன்: தற்போது பிரிட்டனில் வசித்துவரும் பாகிஸ்தானைச் ச‍ேர்ந்த இளம்பெண் மலாலாவுக்கு, தாலிபான் அமைப்பிலிருந்து மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த மலாலா, பெண் கல்விக்காக குரல் கொடுத்து வந்தவர். கடந்த 2012ம் ஆண்டு இவர் பள்ளியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு, படுகாயமடைந்து, பின்னர் உயிர்பிழைத்து தற்போது பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

இவருக்கு, மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. தலிபான்கள் அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில், “இரண்டாவது முறை உங்கள் வாழ்க்கையை எடுக்கும்போது அதில் எந்தத் தவறும் இருக்காது” என்று பதிவிட்டிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பின் மலாலாவை மிரட்டி தலிபான் பயங்கரவாதி பதிவிட்ட இந்த ட்வீட் வைரலானது.

இதையடுத்து, இந்த ட்வீட்டை குறிப்பிட்டு மலாலா தனது ட்விட்டரில், “இவர் தலிபான் அமைப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் . என் மீதும் பல அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதற்குப் பொறுப்பேற்றுள்ள இவர், இப்போது சமூக ஊடகங்களில் மக்களை மிரட்டுகிறார். இவர் எப்படி தப்பினார்?” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது, இஹ்ஸானுல்லா இஹ்சனின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பைச் சேர்ந்த இஹ்ஸானுல்லா இஹ்சன், கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடனான ஒப்பந்தத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்படி சுமார் 3 ஆண்டுகள் சிறையிலிருந்த அவர், கடந்த 2020ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.