புதுச்சேரி,
வைகோ இல்லாவிட்டாலும்,  மக்கள் நல கூட்டணியை தொடர்ந்து வழிநடத்தி செல்வோம் என, விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற விடுதலைசிறுத்தைகள் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் பேசும்போது இதை குறிப்பிட்டார்.
வைகோ மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தை தொடர்ந்து, அமைதியாக இருந்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேற்றைய விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற மாநாட்டில் வி.சி. தலைவர் திருமாவளவன் பேசியதாவது,
மாநாட்டு மேடையில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர். ஆனால், வைகோ இல்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், வைகோவுடனான நம் நட்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மோடியின் பொருளாதார கொள்கை வைகோவுக்கும், நமக்கும் உள்ள நட்பை சிதைத்து விட்டது. ஆனாலும், அவர் தனது உயர்நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிக்கும் போது, மக்கள் நல கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறினாலும், கட்சி தலைவர்களிடம் உள்ள நட்பு என்றென்றும் தொடரும் என்று அறிவித்துள்ளார். அது நமக்கு ஆதரவையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலை சிறுத்தைகளும் தொடர்ந்து மக்கள்நல கூட்டணியை நடத்தி செல்வோம்.
தேர்தல் ஆதாயத்துக்கு மட்டுமே உறவுகளை கட்டமைப்பது அல்ல நம் நோக்கம். மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களை ஒருங்கிணைத்து தற்போது பணியாற்ற வேண்டிய வரலாற்று தேவை உள்ளது என்பதை உணர்ந்து உள்ளோம்.
கருப்பு பணத்தை ஒழிக்க கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்க, தீவிரவாத செயல்களை தடுக்க, ஊழலை ஒழிக்க என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அது உண்மை இல்லை. அவரது நோக்கம் அதுவல்ல என்று சொல்வதற்குதான் இந்த மாநாட்டை கூட்டியுள்ளோம்.
மோடி தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளால் மட்டுமே கருப்பு பணத்தை ஒழித்து விட முடியாது. ஏனென்றால், மத்திய அரசின் கொள்கை தவறான கொள்கை நோக்கம் தவறானது. இன்னும் 50 நாட்கள் ஆனாலும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இந்த கூட்டத்தில்  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Also read