புதுடெல்லி:

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் மற்றும் நீதிபதி ஏகே.பட்நாயக்கின் விசாரணை அறிக்கை விவரத்தை மக்களுக்கு தெரிவிக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

சிபிஐ இயக்குனராக அலோக் வர்மாவை மீண்டும் நியமதித்த உச்சநீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இறுதி முடிவு எடுக்க பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிட்டது.

இந்த குழுவில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 10-ம் தேதி அலோக் வர்மா குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த இந்த உயர்மட்டக் குழு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கியது.

அலோக் வர்மாவை நீக்க பிரதமர் மோடியும், நீதிபதி சிக்ரியும் ஆதரவு தெரிவிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் மட்டும் வர்மா மீது நடவடிக்கை எடுத்தது ஒரு தலைபட்சமானது என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி உட்பட பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன் கார்கே எழுதிய கடிதத்தில், ஜனவரி 10-ம் தேதி உயர்மட்டக் குழுவில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் மற்றும் நீதிபதி ஏகே.பட்நாயக் அறிக்கையின் விவரத்தையும், உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் நடந்ததையும் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
அப்போதுதான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.