டெல்லி: நமது மக்களில் பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அப்படி இருக்கும்போது, மத்தியஅரசு எப்போது பூஸ்டர் ஷாட்களை தொடங்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் ஜனவரி 2021-ல் மெதுவாகத் தொடங்கிய தடுப்பூசி வழங்கல்,  மெதுவாக சூடு பிடித்தது. ஆனால், சமீப காலமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி வழங்கத் தொடங்கி விட்டால், தொற்றுப் பரவல் எண்ணிக்கை குறையும் என்று பலரும் நம்பிய நிலையில், நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், 3வது அலை பரவலுக்கு முன்னதாக நாட்டின் 60% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும், அதற்கான இலங்கை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருப்ப தாக மோடி அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால், அது நிறைவேறாத சூழலே ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  முதல் கட்டமாக முன்களப் பணியாளர் களும், பின்னர், 60வயதுக்கு மேற்பட்டவர்களும், தொடர்ந்து 40வயதுக்கு மேற்பட்டவர்கள் என விரிவுபடுத்தப்பட்ட நிலையில், இறுதியாக 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாகவே  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை  138 கோடி பேருக்க தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.ஆனால், இரு டோஸ்களும் எடுத்துக்கொண்டவர்கள் 50 கோடி பேர் மட்டுமே. தற்போதைய ஆய்வு முடிவுகளின்படி, தடுப்பூசிகளின் வீரியம் 3 மாதம் மட்டுமே என உள்ள நிலையிர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தற்போது பரவத்தொடங்கி உள்ள ஒமிக்ரான் தொற்றால் அதிக அளவு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தடுப்பூசிகளை செலுத்தும் பணியை தீவிரப்படுத்த மத்தியஅரசு வலியறுத்தி வருகிறது. ஆனால்,  தடுப்பூசி போடுவதில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கிடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது. பல கிராமப்புறங்களில் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலை தொடர்கிறது. மேலும், முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஏராளமானோர் 2வது டோஸ் தடுப்பூசி எடுக்க முன்வராத நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணமாக, தடுப்பூசியால், பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டுக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

உடல்நிலையில் புதுவகையான பாதிப்புகள், நோய்கள் அடுத்தடுத்து பரவுவதால், மக்களிடையே தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொடக்கத்தில் விரைவாக நடைபெற்ற தடுப்பூசிகள் செலுத்தும் பணி சமீப காலமாக குறைந்துள்ளது. இது நாளுக்கு நாள் குறைந்து வருவது, மக்களிடையே தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதே என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், தற்போது வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் தொற்றை தடுக்க பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை போடத்தொடங்கி உள்ள நிலையில், இந்தியா, இதுவரை அது தொடர்பான எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இதுவரை குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கே அனுமதி வழங்கப்படாத நிலையில், பூஸ்டர் டோஸ் எங்கிருந்து வழங்குவது என சமூக ஆர்வலர்கள் கேலி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதிக்குள் நாட்டின் 60சதவிகிதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என வீராப்பாக அறிவித்த மோடி அரசு, தற்போது வரை, மொத்த மக்கள் தொகையில் 39.9 சதவிகிதம்   பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 138 கோடி பேருக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 55.1 கோடி பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், மோடி அரசு  முதல்டோஸ் மட்டும் போடப்பட்டுள்ள கணக்கை வெளிக்காட்டி, மக்களை ஏமாற்றி வருகிறது. இது தொடர்பான தகவல் இந்திய அரசின் இணைய தளத்திலேயே (கீழே உள்ள படம்) வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, தனியார் ஊடகத்தின் ஆய்வு அறிக்கையுடன், மோடி தலைமையிலான மத்தியஅரசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். அதில், நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்னும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில், மோடி அரசு, எப்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி குறித்து தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மத்தியஅரசு கூறியதுபோல, நாட்டின் 60 சதவிகித மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த முடியாது என்றும், தற்போதைய நிலவரப்படி, டிசம்பர் 31ந்தேதிக்குள் அதிகபட்சமாக 42% அளவிலேயே தடுப்பூசி செலுத்த முடியும் என தெரிவித்து உள்ளது.

கடந்த ஆகஸ்டு மாத நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 58 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 22ந்தேதி (இன்றைய) நிலவரப்படி  நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், மத்தியஅரசு எப்படி தனது இலக்கை எட்ட முடியும்.

இதை சுட்டிக்காட்டியே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்தியஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்தியஅரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பூசி  பட்டியல்: