சென்னை
அதிமுக வின் இரு அணிகளான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆகி உள்ளன.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுக மூன்று அணிகளாக பிளவு பட்டது. அதில் பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி அணியும் ஒன்றாகி தற்போது மூன்று மாதங்கள் ஆகி உள்ளன. ஆகஸ்ட் 21ஆம் தேதி இரு அணிகளும் இணைந்தது தெரிந்ததே. ஆயினும் இன்னும் இரு அணிகளும் முழுமையாக ஒற்றுமையாகவில்லை என செய்திகள் வருகின்றன.
அதை உறுதிப் படுத்துவது போல தற்போது பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூலில் ஒரு பதிவை பதிந்துள்ளார். அதில், “இணைப்பு நடந்து மூன்று மாதம் முடிந்து நான்காம் மாதம் துவங்கி உள்ளது. மாதங்கள் நகர்கின்றன ஆனால் மனம்?” என பதிந்துள்ளார். இது குறித்து வேறு எதுவும் விளக்கம் கொடுக்க அவர் மறுத்து விட்டார்.
இது குறித்து பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த ஒரு தலைவர், “இணைப்புக்கு முன்பு இருந்தே நாங்கள் பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என விரும்பினோம். ஆனால் எடப்பாடி அதை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் பொது எதிரியான சசிகலாவை எதிர்ப்பதற்காகவும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவும் நாங்கள் இணைப்பை ஒத்துக் கொண்டோம்.
அது மட்டுமின்றி செயல் கமிட்டி ஒன்று உருவாக்கப் பட்டது. அதில் பன்னீர்செல்வம் அணியினர் 6 பேரும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் 5 பேரும் உள்ளனர். கட்சியின் செயற்குழு இல்லாததால் இந்த கமிட்டியின் சொற்படி கட்சி நடத்த சட்டம் பிறப்பிக்கப் பட்டது. இதுவரை இந்த கமிட்டியின் கூட்டம் நடத்தப்படவில்லை. அவரவர் விருப்பப்படி அவரவர் நடந்துக் கொள்கின்றனர்.
தற்போது ஆளும் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை எனில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு பன்னீர் செல்வத்தை குறை சொல்லக் கூடும். ஆனால் அதற்கு பன்னீர் எப்படி பொறுப்பாவார்?” என தெரிவித்துள்ளார்.
ஆளும் அதிமுக அணியில் இருந்து ஜெயலலிதா வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மைத்ரேயன் என்பது குறிப்பிடத் தக்கது. ”என்ன காரணம் சொன்னாலும் அம்மா வாழ்ந்த போயஸ் இல்லத்தில் சோதனை நடந்தது மிகவும் வருந்தத் தக்கது. என்னைப் பொறுத்தவரையில் அம்மாவின் இல்லம் எனக்கு ஒரு கோவில்” என தெரிவித்துள்ளார்.