சென்னை: சென்னையில் நடைபெறும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, மார்ச் மாதத்தில் தமிழகம் வழியாக இயங்கும் பல்வேறு முக்கிய விரைவு ரயில்களின் பயண நேரங்களில் 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில் ரயில் பாதையின் ஒரு பகுதியை மூடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், மார்ச் மாதத்தில் பல்வேறு முக்கிய ரயில்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் ரயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக சென்றடையும்.

இதன்படி, மார்ச் 12-ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் பாட்னா – எர்ணாகுளம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22644) 50 நிமிடங்களும், மார்ச் 13-ம் தேதி மதியம் 3.50-க்கு புறப்படும் நரசாபூர் – SMVT பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 07153) 45 நிமிடங்களும் தாமதமாக இயங்கும். மார்ச் 11 அன்று இரவு 7.35 மணிக்கு புறப்படும் திப்ருகார் – கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22504) 40 நிமிடங்கள் தாமதமாகும்.

குறிப்பாக, மார்ச் 28-ம் தேதி புறப்படும் லால் குவான் – KSR பெங்களூரு பூஜா ஸ்பெஷல் (வண்டி எண்: 05074) 3 மணி நேரம் 20 நிமிடங்களும், அதே நாளில் புறப்படும் தானாப்பூர் – SMVT பெங்களூரு சங்கமித்ரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12296) 2 மணி நேரம் 10 நிமிடங்களும் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா – சென்னை சென்ட்ரல் மெயில் (வண்டி எண்: 12839) மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 1 மணி நேரம் 5 நிமிடங்களும், மார்ச் 7-ம் தேதி 1 மணி நேரம் 15 நிமிடங்களும் தாமதமாக வந்து சேரும்.

மேலும், மார்ச் 5-ம் தேதி புறப்படும் பாட்னா – எர்ணாகுளம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 60 நிமிடங்களும், மார்ச் 5 மற்றும் 7-ம் தேதிகளில் புறப்படும் புதுடெல்லி – சென்னை சென்ட்ரல் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12616) 15 நிமிடங்களும் காலதாமதமாகும். மார்ச் 6-ம் தேதி புறப்படும் நியூ தின்சுகியா – எஸ்.எம்.வி.டி பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22502) 60 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.

தமிழகத்திற்குள் இயங்கும் ரயில்களைப் பொறுத்தவரை, மார்ச் 26-ம் தேதி சென்னை எக்மோர் – மதுரை வைகை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12635) 60 நிமிடங்களும், மார்ச் 28-ம் தேதி 1 மணி நேரம் 10 நிமிடங்களும் தாமதமாகப் புறப்படும். புதுச்சேரி – காக்கிநாடா போர்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17656) மார்ச் 26 மற்றும் 28-ம் தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாகும்.

இதுதவிர, இந்தூர் – திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் (மார்ச் 9) 50 நிமிடங்களும், தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (மார்ச் 7 மற்றும் 14) 35 நிமிடங்களும், SMVT பெங்களூரு – திருவனந்தபுரம் வடக்கு ஸ்பெஷல் (மார்ச் 18) 1 மணி நேரம் 15 நிமிடங்களும், KSR பெங்களூரு – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (மார்ச் 25) 30 நிமிடங்களும் தாமதமாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]