டில்லி
மக்களவை நெறிமுறைக் குழு முன் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆஜராகி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். சபாநாயகர் ஓம்பிர்லா இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று துபே கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் மக்களவைக்குக் கேள்விகளை நேரடியாகப் பதிவிடுவதற்காக, நாடாளுமன்ற இணையதளத்தைப் பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் ஹிராநந்தனிக்கு மஹுவா மொய்த்ரா வழங்கியதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புகார் மீது, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்துகிறது. சென்ற மாதம் (அக்டோபர்) 31 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
நெறிமுறைக் குழு அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்புவதற்கு முன்பாகவே ஊடகங்களில் வெளியிட்டதை காரணம் காட்டி, வேறொரு நாளில் ஆஜராக அனுமதிக்கும்படி மஹுவா கேட்டுக்கொண்டதால் விசாரணை தேதி தள்ளி வைக்கப்பட்டது.
மஹுவா மொய்த்ரா தாம் நவம்பர் 2ம் தேதி ஆஜராவதாக நெறிமுறைக் குழுவுக்கு கடிதம் எழுதியிருந்தார் அவர் அதன்படி இன்று மக்களவை நெறிமுறைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் மஹூவா மொய்த்ரா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.