2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் வெறும் ஐந்து மாதங்களில் மகாராஷ்டிராவில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மும்பையில், சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் மற்றும் என்சிபி-எஸ்சிபி எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்திய கூட்டணியின் தலைவர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, காங்கிரஸ், சிவசேனா-யுபிடி, என்சிபி-எஸ்எஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மகாராஷ்டிரா மாநில வாக்காளர் பட்டியலைக் கேட்டுள்ளதாகக் கூறினார்.
“மகாராஷ்டிரா தேர்தல்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கூறி வருகிறோம், மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்கள் எங்களுக்குத் தேவை,” என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு அதற்கு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும், “இப்போது அரசியலமைப்பின் முழுமையான அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், நாங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
இதன் அடுத்த கட்டமாக நீதித்துறையின் கதவுகளைத் தட்டுப் போவதாக அவர் கூறினார்.
“தேர்தல் ஆணையம் எங்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கத் தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் சாத்தியமான ஒரே காரணம் ஏதோ தவறு இருக்கிறது, அது அவர்களுக்குத் தெரியும்” என்று காந்தி கூறினார்.
“தேர்தல் ஆணையம் உயிருடன் இருந்தால், அது ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்,” என்று ராவத் கூறினார், இல்லையென்றால், “தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அடிமை என்று பொருள் கொள்ளப்படும்” என்றும் கூறினார்.