மும்பை: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  பாதிப்பு உறுதியானதால், இந்த மாதம் இறுதி வரை  (மார்ச் 31ந்தேதி)   தியேட்டர்கள், தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள்., ஓட்டல்கள்  போன்றவை  50% பணியாளர்களுடன் இயக்க முதல்வர்  உத்தவ்தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது கொரோனா பரவலின் 2வது அலை என விமர்சிக்கப்படுகிறது. நாடு முழுவதும  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,14,331 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 25,833 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று ஒரே நாளில் 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,370 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,83,679 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20,654 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 3,93,39,817 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதிலும் 2,71,282 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 25,833 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,96,340 ஆகி உள்ளது  நேற்று 58பேர் உயிர் இழந்து மொத்தம் 53,138 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,174 பேர் குணமடைந்து மொத்தம் 21,75,565 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,66,353 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் காவல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் கடந்த 15ந்தேதி முதல் ஒரு வாரம்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  21-ம் தேதி ஊரடங்கு  தொடர்கிறது.  அத்தியாவசிய தேவைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து மக்கள் முக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தேவையில்லாமல் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்திருந்தார்.

இருந்தாலும் தொற்று பரவல் அதிகரிப்பு தொடர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த மாநில மீண்டும் பல்வேறு கெடுபிடிக்களை அறிவிக்கத் தொடங்கி உள்ளது.

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில்  உள்ள அனைத்து தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்கள் மார்ச் 31 வரை 50 சதவீதத்துடன் மட்டுமே இயங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% திறனில் செயல்பட வேண்டும்.

உற்பத்தித்துறை நிறுவனங்களில்,  சமூக இடைவெளியுடன் உள்ளூர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபடி உற்பத்தி அலகுகள் பணி மாற்றங்களை அதிகரிக்க அனுமதிக்கப்படும்.

முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், ஓட்டல்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் கிருமிநாசினி, முகக்கவசம், சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.